43 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தெரிந்தவர் நியமனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன்: புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேச்சு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன் என்று புதிய தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே.ஆர்.ஸ்ரீராமுக்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ‘‘கடந்த 1981ம் ஆண்டு தமிழ்பேச தெரிந்த எம்.எம்.இஸ்மாயிலை தலைமை நீதிபதியாக இந்த நீதிமன்றம் பெற்றது.

அதன் பிறகு 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் பேச தெரிந்த தலைமை நீதிபதியை பெற்றுள்ளோம். தலைமை நீதிபதியின் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்’’ என்றார். இதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் ஆகியவற்றின் நிர்வாகிகளும் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.இதை தொடர்ந்து, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ஏற்புரை வழங்கினார். அவர் தமிழிலேயே பேச்சை தொடங்கினார்.

அவர் பேசும்போது, ‘‘தமிழ் தாய்க்கு முதல் வணக்கம். சகோதர சகோதரிகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். பள்ளியில் தமிழ்தான் படித்தேன். 500க்கும் மேற்பட்ட திருக்குறள்கள் மனப்பாடம் செய்த இந்த நிலையில் இன்று ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற குறள் மட்டுமே நினைவில் உள்ளது. தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியம் ஆகியவை மிகச்சிறந்தவை. உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு.

உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன். நீதிமன்றம் சுமுகமாக இயங்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். நடுநிலைமை அதிகாரத்தில் இருந்து, சமன் செய்து சீர்தூக்கி செயல்பட வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், பி.குமரேசன், பி.முத்துக்குமார், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் ரகு மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

The post 43 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தெரிந்தவர் நியமனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன்: புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: