வேலூர் கோட்டையில் காதலனை தாக்கி இளம்பெண்ணை கத்திமுனையில் பலாத்காரம் செய்த 3 பேர் கைது : போலீசார் அதிரடி நடவடிக்கை

வேலூர்: வேலூர் கோட்டைக்கு இரவு நேரத்தில் காதலனுடன் வந்த இளம்பெண்ணை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே கடையில், வேலை செய்யும் காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்துள்ளனர்.  கடந்த 18ம் தேதி இரவு 9 மணியளவில் இருவரும் கோட்டை பூங்காவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் கும்பல் காதலனை தாக்கி விட்டு, கத்திமுனையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செயின், கம்மல், செல்போன்களை பறித்துக் கொண்டு சரமாரி தாக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்து இளம்பெண்ணின் காதலன் வேலூர் வடக்கு போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுெதாடர்பாக பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேலூர் கோட்டையில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் மற்றும் காதலன் தெரிவித்த அடையாளங்களை வைத்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினோம். அவர்கள் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த அஜித்(19), சக்தி(19), மணி(41) என்பதும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும்  இரவு நேரங்களில் கோட்டையில் தனியாக இருக்கும் ஜோடிகளிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்து செல்வார்கள். கைதானவர்களில் அஜித் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது’ என்றனர்.

போதைப்பொருள் விற்பனை ஜோர்

வேலூரில் உள்ள மலையடிவார பகுதிகளிலும், ரயில் நிலையங்களை ஒட்டிய பகுதிகளிலும் போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. அதேபோல், வேலூர் கோட்டையில் கஞ்சா, டோப் எனும் போதை பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மயங்கி கிடக்கின்றனர். போதைக்கு அடிமையான சிறுவர்கள் தங்களை தாங்களே அடித்து கொள்வதுடன், பிளேடால் அறுத்துக் கொண்டும், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுவதாலும் அவர்களை எச்சரித்து மட்டுமே அனுப்ப முடிகிறது என்று போலீசார் தெரிவித்தனர். போதை ஆசாமிகள் கோட்டைக்கு வருபவர்களை தாக்கி வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போதை பொருட்கள் நடமாட்டம் குறித்தும் அதனை பயன்படுத்தும் வாலிபர்கள் குறித்தும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: