முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை?

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. தமிழக சட்டப்பேரவையின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி  நடைபெற்றது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதையடுத்து 3 நாள் கவர்னர் உரை மீது விவாதம் நடைபெற்று 9ம் தேதி பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது. பட்ஜெட்டை எப்போது தாக்கல் செய்யலாம், பட்ஜெட்டில் என்னென்ன  அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, ஒற்றை சாளர முறையை முழுவதுமாக நடைமுறைபடுத்துவது, பதிவு கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள்  குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாலை 4.30 மணியளவில் தொடங்கிய தமிழக அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிலையில், 5.50 மணியளவில் முடிவடைந்தது. அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா,  செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, செங்கோட்டையன், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: