ஆரணி ஆற்று மேம்பாலம் பணி வரும் ஜூன் மாதம் முடியுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே கடந்த 1928ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக திருப்பதி, புத்தூர், காளஹஸ்தி மற்றும் ரேணிகுன்டா பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம் மற்றும் தாராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள்  பயன்படுத்தி வருகின்றனர். இந்த தரைப்பாலத்தை கடந்துதான் திருவள்ளுர், பெரும்புதூர்  மற்றும் பூந்தமல்லி  பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள அனந்தேரி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி மற்றும் பென்னலூர்பேட்டை உள்ளிட்ட 50 கிராம மக்களும் மேற்கண்ட பாலத்தைதான் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கி 50 கிராம மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதன்காரணமாக ஒரு மாதத்துக்கு மேலாக ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் மற்றும் பெரும்புதூர் செல்லும் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள்  மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 40 கி.மீ.தூரம் கடந்து செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்தநிலையில் ஆரணி ஆற்றில் பாலம் கட்டுவதற்கு 27 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்  மாதத்தில்  புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது. பால பணிகளை 18 மாதங்களில் முடிக்க  வேண்டும். ஆனால் தற்போது 16 மாதம் ஆகிவிட்டதால் இன்னும் 2 மாதத்தில் பணிகளை முடிக்க வேண்டும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறும்போது, ‘’மேம்பால பணிகள் வரும் ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிந்து  விடும்’ என்றார்.

Related Stories: