ஆத்தூருக்கு 21ம் தேதி முதல்வர் வருகை சாலையை அடைத்து மேடை அமைப்பு: பொதுமக்கள் அவதி

ஆத்தூர்: எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி ஆத்தூருக்கு வருகிற 21ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். இதையொட்டி முதல்வர் பேச மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சாலையை அடைத்து மேடை அமைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரும் 21ம் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதனையொட்டி  ஆத்தூர் நகராட்சி ராணிப்பேட்டை கடைவீதியில் மிக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நேற்று காலை முதல் துவங்கி நடந்து வருகிறது.

ராணிப்பேட்டை கடைவீதி சாலை, ஆத்தூர்  நகரின் பிரதான சாலையாகும். இச்சாலையின் இருபுறங்களையும் அடைத்து மேடை அமைக்கப்படுவதால் பொதுமக்கள் வரும் புதன்கிழமை வரை சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் கூறியதாவது: தற்போது மேடை அமைந்துள்ள பகுதியில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகின்றன என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கின் அடிப்படையில்தான் ராணிப்பேட்டை பிள்ளையார் கோயில் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அதன் பின் அந்த இடத்தில் பொதுகூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுகூட்டத்திற்கு அனுமதியளித்து இருப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து திங்கள் கிழமை அரசு அலுவலகங்கள் இயக்கும் சூழ்நிலையில் இந்த பிரதான சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டால்,  அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்கள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டியதாகிவிடும். மேலும் ராணிப்பேட்டை கடைவீதியில் உள்ள வணிக நிறுவனத்தினரின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

எனவே சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாற்று இடத்தில் கூட்டம் நடத்த மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். மேலும் கடந்த முறை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின்போது மேடை அமைக்கப்பட்ட இடத்தில் அமைத்தாலும் சிரமம் சற்று குறைவாக இருக்கும் என தெரிவித்தனர்.

Related Stories: