கோர்ட்டில் ஆஜராகாததால் கைது நடவடிக்கை: ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது...பிரியங்கா காந்தி காட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்திக் படேல் தேசவிரோத வழக்கில் ஆஜராகத் தவறியதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த 2015ம் ஆண்டு ஆக. 25ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அரசுக்கு எதிராகவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஹர்திக் படேல் ஆஜராகவில்லை. இதனால், கூடுதல் அமர்வு நீதிபதி பி.ஜி. ஞானேந்திரா ஹர்திக் படேலுக்கு ஜாமீனில் வெளிவராத கைது வாரண்ட்டை பிறப்பித்தார். இதையடுத்து, போலீசார்  ஹர்திக் படேலை தேடியதில் அகமதாபாத் மாவட்டம், வீரம்கம் வட்டத்தில் இருப்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் இரவோடு இரவாக ஆஜர்படுத்திய நிலையில் அவரை வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக்  காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஹர்திக் படேலை போலீசார் கைது செய்தமைக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டரில், ‘விவசாயிகளின் உரிமைக்காகவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் போராடிவரும்  ஹர்திக் படேலை பாஜக தொடர்ந்து துன்புறுத்தி, சீண்டி வருகிறது. அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் குரலாக ஹர்திக் படேல் இருக்கிறார். அந்த மக்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கிறார், மாணவர்களுக்கு  உதவித் தொகை கேட்கிறார். விவசாயிகளை ஒன்று திரட்டி இயக்கமாகக் கொண்டு செல்கிறார். ஆனால், ஹர்திக் படேல் செய்வதையெல்லாம் பாஜக தேசத் துரோகம் என்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: