கூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் இரு தரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் நடந்த சந்திப்புக்கு மு.க.ஸ்டாலின் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்து பரிமாற்றத்துக்கு அந்த அறிக்கை வழிவகை செய்தது என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் ஓட்டை விழாதா என்று நினைப்போர் அசை போடுவதற்கு செயலாக இது அமைவதை நான் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி

கே.எஸ்.அழகிரி, திமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் செய்வது தவறில்லை என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் இரு கட்சி கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆரோக்யமான விவாதங்கள் தான் நடந்தது என்று விளக்கம் அளித்தார். குடியுரிமை சட்டம் குறித்து கருத்து கூறமுடியாத அதிமுக எங்கள் கூட்டணி குறித்து கருத்து சொல்வது தவறு என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் - நாராயணசாமி சந்திப்பு

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அவை அனைத்தும் பேசி சரி செய்து கொள்வோம் என்று தெரவித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது, எங்களுக்குள் விரிசல் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: