ஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் எஸ்டேட், சினிமா துறை நிறுவனங்கள் மீது நடவடிக்கை: லாப தடுப்பு ஆணையம் தீவிரம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேசிய லாப தடுப்பு ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், சினிமா துறை நிறுவனங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆளாக இருப்பதாக, ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து இதுவரை பல்வேறு கட்டங்களாக வரிகள் மாற்றி அமைக்கப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக, நவம்பர் 2017, ஜூலை 2018, ஜனவரி 2019 ஆகிய காலக்கட்டங்களில் பெரிய அளவில் வரிகள் குறைக்கப்பட்டன. இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வரி பலன் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தேசிய லாப தடுப்பு ஆணைய அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஜிஎஸ்டி குறைப்பின்படி பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான விலை மற்றும் கட்டணத்தை குறைக்காமல் ஏமாற்றியதாக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது புகார்கள் குவிந்துள்ளன.

ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி, சினிமா துறை, ஆயுர்வேத தயாரிப்புகள், எலக்ட்ரானிக், டிவி, லக்கேஜ் உள்ளிட்ட பயணம் தொடர்பான பொருட்கள், சுகாதாரம் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இதில் அடக்கம்.

கடந்த 2017 நவம்பரில் இருந்து வந்த புகார்களில் சுமார் 60 சதவீத புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதிக லாபம் ஈட்டிய தொகையை நுகர்வோரிடம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும். மேற்கண்ட நடவடிக்கை மூலம் சுமார் ₹600 கோடி ரூபாயை நிறுவனங்கள் டெபாசிட் செய்துள்ளன. சில பெரிய நிறுவனங்கள் வரி குறைப்புக்கு ஏற்ப, அதிகபட்ச விலையில் குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. மூன்றில் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே வரி குறைப்பு பலனை அடைந்துள்ளதாக கூறுகின்றனர். எனவே, எஞ்சியுள்ள நிறுவனங்கள் மீது லாப தடுப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் சுமார் 40 நிறுனங்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மிகை லாபத்துக்கு ஏற்ப தொகை வசூலிக்கப்படும். இதுதவிர, நுகர்வோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களது உரிமைகளை உணர செய்ய வேண்டும் என்பதிலும் இந்த ஆணையம் தீவிரமாக உள்ளது என்றனர்.

Related Stories: