மத்திய அமைச்சராக 5 ஆண்டு பதவியில் இருந்தும் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய பாஜ அரசில் பொன்.ராதாகிருஷ்ணன் 5 வருடங்களாக அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்கு ஒரு புது திட்டத்தை கூட கொண்டு வரவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசை பற்றி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தொடர்ந்து பேசி வருகிறார். “தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக தமிழகம் மாறி விட்டது” என்று பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் கூறி இருக்கிறார். அவரது கருத்தை பாஜக கருத்தாக நாங்கள் கருதவில்லை.

மத்திய அரசு விருதுகளை அதிக அளவில் பெறும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்த விருது எதற்காக கொடுக்கப்பட்டது. தீவிரவாத செயல் ஒடுக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது, பொதுமக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு மாநிலம், மகளிருக்கு முழுமையான பாதுகாப்பு, ஜாதி, இன மோதல் எதுவும் இல்லை என்று சொல்லி முதல்வரின் முயற்சிக்கு அங்கீகாரம் கொடுத்தது யார். மத்திய பாஜ அரசு. அவர்கள் ஒரு அளவுகோள் வைத்துள்ளனர். இதில், அதிக மதிப்பெண் தமிழகம்தான் வாங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

மத்திய அரசை ஆட்சி செய்யும் கட்சியில்தான் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அப்படியென்றால், இவரது குற்றச்சாட்டு மத்திய அரசை எதிர்த்தா? என்று அவரை நான் கேள்வி கேட்கிறேன். பொன்.ராதாகிருஷ்ணன், 5 வருஷம் மத்திய அமைச்சராக இருந்தார். தமிழகத்துக்கு இவர் எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஒரு திட்டம் கூட இவரால் கொண்டுவர முடியவில்லை. நேராக வருவார், விமான நிலையத்தில் இறங்குவார். பேட்டி கொடுப்பார். அதோடு, அவர் வேலை முடிந்துவிடும். அவருக்கு என்ன விரக்தியோ தெரியவில்லை. அவரது கட்சியில் தலைவர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா? என்று நான் ஜோசியம் சொல்லப்போவதில்லை. அதனால், அவருக்கு உள்கட்சியில் இருக்கும் கோபத்தை எங்கள் மீது காட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அவரது கருத்தை ஒரு விரக்தியின் வடிவமாகத்தான் பார்க்கிறோம். அவரது பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில் தீவிரவாதம் தலைதூக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: