கர்னல் பென்னிகுக் 179வது பிறந்தநாள்: நாளை அரசு விழாவாக கொண்டாட்டம்

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக்கின் 179வது பிறந்தநாள் விழா, நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்தநாளான ஜனவரி 15ம் தேதியை, ‘பென்னிகுக் பொங்கலாக’ தென் தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். பென்னிகுக்கின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என விவசாய சங்கத்தினர், பொதுமக்கள், பெரியாறு அணை மீட்புக்குழுவினர் நீண்ட காலமாக அரசை வலியுறுத்தி வந்தனர்.கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை (ஜன.15) கர்னல் ஜான் பென்னிகுக் 179வது பிறந்தநாள் விழா முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபம் பெயின்டிங் செய்யப்பட்டு, வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர், எஸ்பி கலந்து கொள்ள உள்ளனர். பென்னிகுக் பிறந்தநாள் முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளதால் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: