அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் பாஜகவை விட்டு வெளியேறினால் புதிய அரசு அமைக்க ஆதரவு அளிப்போம் : காங்கிரஸ் கட்சி அழைப்பு

கவுகாத்தி : அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியேறினால் புதிய அரசு அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அசாமில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், வன்முறைக்கு 6 பேர் உயிரிழந்தனர். அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் தமது மனசாட்சிக்கு விரோதமாக பாரதிய ஜனதா தலைவர்களின் தூண்டுதலின் பெயரில் செயல்படுவதாக குற்றச் சாட்டு இருந்தது.

இந்நிலையில் அசாம் பழங்குடி மக்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சோனோவால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. 30 எம்எல்ஏக்களுடன் அவர் ஆளும் கட்சியை விட்டு வெளியேறினால் சோனோவால் மீண்டும் முதல்வராக்க ஆதரவு அளிக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டமன்றத்தில் பாஜக கட்சிக்கு 61 உறுப்பினர்கள் உள்ளனர்.

கூட்டணி கட்சிகளான அசாம் கண பரிஷத்-க்கு 14 பேரும் போடோலாந்துக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர். அசாம் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 25 ஆகும். அனைத்திந்திய யூடிஎப் கட்சிக்கு 13 உறுப்பினர்கள் இருக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான அரசு அமைக்க காங்கிரஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருப்பதால் அசாமில் ஆட்சி மாற்றம்  ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

Related Stories: