50 லட்சம் கோடி வேண்டும் ரயில்வேயை மேம்படுத்த தனியார்துறை உதவி தேவை: அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பியூஷ் கோயல் நேற்று அளித்த பேட்டி: ரயில்வே மக்களின் சொத்து. இத்துறை தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆனால், ரயில்வேயின் துரித வளர்ச்சிக்கு தனியார் துறை உதவி தேவை.  கடந்த 1968ல் வெளியான ஆசிர்வாத் பட பாடலில் வரும் ரயில் போல், இன்னும் சில ரயில்கள் மெதுவாக சென்று கொண்டிருக்கின்றன. அவற்றை தனியார் உதவியுடன், மும்பை மின் ரயில்கள் போல் அதிவேக ரயில்களாக மாற்ற வேண்டும். நவீனமயமாக்கல் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் போக்குவரத்தை விரிவுபடுத்த ரயில்வே துறை அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி முதலீட்டை பெற விரும்புகிறது. இவ்வளவு பெரிய முதலீடு ரயில்வே மற்றும் அரசு பட்ஜெட்களால் சாத்தியம் இல்லை. அதனால், பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புதான் இதை சாத்தியமாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கேரள அரசு ஒத்துழைக்காததால் சபரிமலை ரயில் திட்டம் தாமதம்

சபரிமலை ரயில் திட்டம் குறித்து பியூஷ் கோயல் கூறுகையில், ‘‘அங்கமலி-சபரிமலை இடையிலான 111 கிமீ நீள ரயில் பாதை திட்டம் 550 கோடி செலவில் கடந்த 1997-98ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது. ஆனால், கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காததால் இத்திட்டம் தாமதமாகிறது. இது பற்றி அந்த மாநில முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்,’’ என்றார்.

Related Stories: