மது குடித்தால் தான் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்வார்கள்: ம.பி. காங்கிரஸ் அமைச்சர் விளக்கம்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சமீபத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் கிளை டாஸ்மாக் கடைகளை திறக்க ஒப்பந்தக்காரர்களுக்கு அனுமதி அளித்தது. மாநில வருவாயை  அதிகரிப்பதற்காகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் கமல்நாத்தின் இந்த நடவடிக்கை, மதுபான மாபியாக்களுக்கு புத்தாண்டாக அமைந்து விடும் எனவும், மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வர  வேண்டும் எனவும் கேட்டு முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அரசின் முடிவுக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்ததுடன், முடிவை திரும்பப் பெறவும் வலியுறுத்தியது.

இந்நிலையில், மதுபான விற்பனை குறித்து மாநில அமைச்சர் கோபால் பார்கவா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், மது குடிக்க யாரையும் யாரும் வற்புறுத்த முடியாது. தாங்களாக விருப்பப்பட்டு அவர்கள் வாங்கி, குடிக்கிறார்கள்.  ஜனநாயகத்தில் ஒருவருக்கு அவர் விரும்பியதை சாப்பிடவும், குடிக்கவும் உரிமை உள்ளது.குடிப்பதற்கு நாங்கள் எந்த தடையும் விதிக்க முடியாது. அவர்கள் இரவில் ஒரு பெக் மட்டுமே குடிக்கிறார்கள். அப்படி குடிக்கவில்லை என்றால்  அவர்களால் இரவில் தூங்கவோ, மறுநாள் முழுவதும் வேலை செய்யவோ முடியாது.

அவர்கள் குடிப்பதால் தான் இரவில் நன்றாக தூங்குவதுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்கிறார்கள். சிலர் தங்கள் நோய் தீர்வதற்காக மருந்தாக மது குடிக்கிறார்கள். சிலர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு  டாக்டர் அறிவுரைபடி ஒரு பெக் குடிக்கிறார்கள். சட்ட விரோதமாக மதுக்கடைகள் திறக்கப்படுவதை தடுக்கவும், வருவாய் இழப்பை சரி செய்வதற்காகவும் கமல்நாத் அரசு, கிளை டாஸ்மாக்கள் திறக்க அனுமதி அளித்துள்ளது. சிவராஜ் சிங்  சவ்கானுக்கு மதுபான விற்பது பற்றி கவலை என்றால் அவரது ஆட்சி காலத்தில் மதுவிலக்கு கொண்டு வந்திருக்கலாமே என்றார். மதுவிலக்கிறகு எதிராகவும், மது அருந்துவோருக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் அமைச்சர் பேசி உள்ளது மத்திய  பிரதேச அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: