துணைத்தலைவர் பதவிக்கு பணம் கேட்பதாக புகார் பதவியை ராஜினாமா செய்வதாக இரண்டு கவுன்சிலர்கள் அறிவிப்பு : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விருதுநகர்: துணைத்தலைவர் பதவிக்கு பணம் கேட்பதாக புகார் கூறி, 2 வார்டு உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வலையன்குளம் கிராம ஊராட்சி கவுன்சிலர்களாக, முனியாண்டி, பொன்ராம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தனர். அங்கிருந்த சூலக்கரை போலீசார், அவர்களை சமாதானம் செய்து, ‘‘வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும்’’ எனக்கூறி அனுப்பி வைத்தனர்.

முன்னதாக ஊராட்சி கவுன்சிலர் முனியாண்டி கூறுகையில், ‘‘வலையன்குளம் கிராம ஊராட்சியில் வலையன்குளம், கோட்டப்பட்டி கிராமங்கள் உள்ளன. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துராம் தலைவராகவும் மற்றும் 6 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி ஊர் மக்கள் ஆதரவோடு தேர்வு செய்யப்பட்டோம்.  இதை தொடர்ந்து துணைத்தலைவர் பதவியை வலையன்குளம் 3வது வார்டு கவுன்சிலரான முனியாண்டி அல்லது 4வது வார்டு கவுன்சிலரான பொன்ராமுக்கு வழங்குவதாக அறிவித்தனர். ஆனால், தற்போது ஊராட்சி கிளார்க் மாரியப்பன் மற்றும் தலைவராக தேர்வான முத்துராம் ஆகியோர், பணம் கொடுத்து துணைத்தலைவர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர். பணம் கொடுத்து துணைத்தலைவர் பதவியை பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வார்டு உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய இருக்கிறோம்’’ என்றார்.

Related Stories: