கடன் முறைகேடு விவகாரம் ஐசிஐசிஐ சந்தா கோச்சரின் 78 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்த விவகாரத்தில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சரின் 78 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.  கடந்த 2012ல் வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி சார்பில் 3,250 கோடி கடன் வழங்கப்பட்டது. அப்போது அந்த வங்கிதலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சர் இருந்தார். இவரது கணவர் தீபக் கோச்சரின் நியூபவர் ரினியூவபிள் நிறுவனத்தில், வீடியோகான் குழுமத்தின் வேணுகோபால் தூத் பல கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தார்.  எனவே, கணவரின் நிறுவனம் ஆதாயம் அடையும் நோக்கத்தில்தான், சந்தா கோச்சர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி இந்த கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என வங்கி பங்குதாரர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தரப்பில் பி.என்.கிருஷ்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பிறகு, சந்தா கோச்சர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.  நீதிபதி தலைமையிலான குழு நடத்திய விசாரணையில், சந்தா கோச்சர் விதிகளை மீறி கடன் வழங்கியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2018 அக்டோபரில், ஐசிஐசிஐ தலைமை பொறுப்பில் இருந்து சந்தா கோச்சர் விலகினார். இந்த விவகாரம் தொடர்பாக வேணுகோபால் தூத் மற்றும் தீபக் கோச்சரின் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதுதவிர, இந்த வழக்கில் ஆதாயத்தை மறைக்க நடந்த பண மோசடிகள் தொடர்பாக, சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், சந்தா கோச்சருக்கு சொந்தமாக தெற்கு மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, தீபக் கோச்சரின் நிறுவன சொத்துக்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கியதற்கான ஆதாரத்தை 180 நாட்களில் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை கோரியுள்ளதாக, கோச்சாரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை நடவடிக்கை

2018

பிப்.: வீடியோகான் கடன் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை துவக்கியது.

ஏப்.: கடன் விவகாரத்தில் விளக்கம் தர செபி நோட்டீஸ் அனுப்பியது.

மே: செபி நோட்டீசை தொடர்ந்து, சந்தா கோச்சர் மீது விசாரணை நடத்த நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

2019

ஜன: விதிகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளதை நீதிபதி தலைமையிலான குழு உறுதிப்படுத்தியது.

பிப்: சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

Related Stories: