மேலூர் அருகே பல மாதங்களுக்கு பிறகு ‘முத்துச்சாமிபட்டிக்கு’ வந்த அரசு பஸ்: பொதுமக்கள் மகிழ்ச்சி

மேலூர்: பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீண்டும் இயக்கப்படவே கிராம மக்கள் மாலை அணிவித்து வாழை மரம் கட்டி இனிப்புகள் வழங்கி அரசு பஸ்சை வரவேற்றனர். தஞ்சாவூரில் இருந்து பொன்னமராவதி, மருதிப்பட்டி, சூரக்குடி மற்றும் முத்துச்சாமிபட்டி வழியாக மதுரை சென்ற அரசு பஸ் சில மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், நாடளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மதுரை எம்பி வெங்கடேசன் நன்றி கூற முத்துச்சாமிபட்டிக்கு சமீபத்தில் வந்திருந்தார்.

அப்பகுதி மக்கள் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். உடனடியாக கும்பகோணம் போக்குவரத்து டெப்போ அதிகாரிகளிடம் எம்பி பேசி, மீண்டும் பஸ் விடுமாறு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று நேற்று முதல் மீண்டும் அந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. முத்துச்சாமிபட்டி வந்த அரசு பஸ்சிற்கு மாலை போட்டு, வாழைமரங்களை கட்டி வரவேற்ற கிராம மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Related Stories: