டாடா குழும செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: டாடா குழும செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. டாடா குழும மேல்முறையீடு வழக்கில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி கடந்த 2016-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து, தேசிய கம்பெனிகள் சட்ட தீா்ப்பாயத்தில் முறையிட்டாா். அதில், அவருக்கு எதிராக தீா்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய கம்பெனிகள் மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அவா் அணுகினாா்.

அந்த தீா்ப்பாயம், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்குமாறு கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும் அந்த தீா்ப்பாயம் கூறியிருந்தது. இந்த தீா்ப்பை அமல்படுத்துவதற்கு தீா்ப்பாயம் ஒரு மாத காலம் அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில், இந்த தீா்ப்பை எதிா்த்து டாடா சன்ஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதன் இடையே தேசிய கம்பெனிகள் மேல்முறையீட்டு தீா்ப்பாயம் எனக்குச் சாதகமாகத் தீா்ப்பளித்திருந்தாலும், டாடா சன்ஸ் அல்லது டாடா கன்சல்டன்சி சா்வீஸஸ், டாடா டெலிசா்வீசஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ் என டாடா குழுமத்தின் எந்தவொரு நிறுவனத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என சைரஸ் மிஸ்திரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் டாடா குழும செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories: