உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக ரஃபீக் என்பவர் கேரளாவில் கைது : தமிழக போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக ரஃபீக் என்பர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பூந்துறையில் கைது செய்த போலீசார் ரஃபீக்கிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், 2 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் சிசிடிவி உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் சோதனை சாவடி உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மார்த்தாண்டம், பருத்திவிளை, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வில்சன் (58) என்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார்.

சுமார் 9.25 மணியளவில் வில்சன் தனியாக இருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் 2 பேர் சோதனை சாவடியில் இருந்த வில்சனை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் கத்தியாலும் வெட்டியுள்ளார். இதில் வில்சன் மீது குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். சந்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் வில்சனை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வில்சன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு வில்சனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேற்று மதியம் 2.15 மணியளவில் பருத்திவிளையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வில்சன் உடலுக்கு டிஜிபி திரிபாதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின், மார்த்தாண்டம் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. வில்சன் கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை சோதனையிட்டனர். அதில் துப்பாக்கி சூடு நடந்த பிறகு 2 பேர் தலையில் தொப்பியுடன் பள்ளிவாசலுக்குள் பதற்றத்துடன் ஓடி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. 2 பேர் கையிலும் துப்பாக்கி, கத்தி போன்ற  ஆயுதங்கள் இருந்தன. ஒருவர் பள்ளி வாசலில் நுழைந்ததும் தனது தலையில் இருந்து தொப்பியை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறார். பின்னர் அவர்கள் சாலையில் சாதாரணமாக நடந்து செல்வது போன்ற காட்சிகளும் இருந்தன.  துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அவர்கள் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.  அதனடிப்படையில் தமிழகம் மற்றும் கேரளா போலீசார் இணைந்து தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

துப்பாக்கி குண்டுகள்

எஸ்.ஐ. வில்சன் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள், பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்திப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: