சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் (திமுக) பேசியதாவது: சென்னை நகரில் ஐஐடி உயர்கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஐஐடி நிர்வாகம் தற்போது எடுத்துள்ள ஒரு நடவடிக்கை வேளச்சேரி மக்கள் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஐஐடி வளாகத்திற்கு பிரதான நுழைவாயில் தவிர 3 பகுதிகளிலும் 3 சிறிய கேட் உள்ளது. அதில் ஒன்று வேளச்சேரி தொகுதியில் 179வது வார்டு காந்தி சாலையில் அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 24.12.19 அன்று ஐஐடி நிர்வாகம் இந்த கேட்டை அகற்றிவிட்டு, தடுப்புச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், உதவித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு 3 கிலோ மீட்டர் சுற்றி உள்ளே வர வேண்டியது உள்ளது.