மனுக்கள் கொடுத்தும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை

* துரைமுருகன் குற்றச்சாட்டு

* முதல்வர் விளக்கம்

சென்னை: மனுக்கள் கொடுத்தும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று துரைமுருகன் குற்றம்சாட்டினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கிராமத்திற்கு செல்கின்ற போது வயது முதிர்ந்தவர்கள், உழைக்கும் திறனற்று இருக்கிற அந்த முதியவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். அதன்படி, 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தேன். இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 888 பேருக்குதான் கொடுத்திருக்கிறார்கள், எஞ்சியவர்கள் இன்னும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: அது நடந்தால் பெருமைப்படக்கூடியவன் நானாகத்தான் இருக்கும். எங்களை போன்ற உறுப்பினர்கள் முதியவர்களின் மனுக்களை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், ‘இந்த ஊருக்கு இத்தனை தான் கொடுக்க முடியும். யாராவது செத்தால்தான், மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்’ என்கின்றனர். முதல்வர் சொன்ன மாதிரி நடந்தால் வரவேற்கலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை.

முதல்வர் எடப்பாடி:  இப்படிப்பட்ட குறைபாட்டை நீக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழகத்திலே 5 லட்சம் முதியவர்களுக்கு இந்த ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டு, அதன்படி கலெக்டர்கள், அமைச்சர்கள் நேரில் சென்று மனுக்களை பெற்று அதற்கு பரிகாரம் செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் தகுதி வாய்ந்த நபர்களை கொடுத்தால் நிச்சயமாக அவர்களுக்கு வழங்கப்படும்.  இப்படி நீங்கள் சொன்ன காரணத்தினாலே தான், இதையெல்லாம் ஆய்வு செய்து கூடுதலாக 5 லட்சம் முதியவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உத்தரவை வழங்கி இருக்கிறேன். கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களை வாங்கியதில், அந்த மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான 1 லட்சத்து 54 ஆயிரத்து 888 நபர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். மீதி இன்னும் 3 லட்சம் பேர்களுக்கு கொடுக்க வேண்டும்.

துரைமுருகன்: நான் கொடுத்தவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.  முதல்வர் எடப்பாடி: இன்னும் மூன்றரை லட்சம் பேருக்கு கொடுக்கலாம். அதுமட்டுமல்ல, முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கு 50,000 ரூபாய் வரை தான் சொத்து இருக்க வேண்டும். அதையும் 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறோம்.

தண்டராம்பட்டு எ.வ.வேலு (திமுக): சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தால், அந்த மனுக்களுக்கு முன்னுரிமை வழங்க இந்த அரசு முன்வருமா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

முதல்வர் எடப்பாடி:  இது முதியோர் உதவி பிரச்னை. இதில் அரசியலே கிடையாது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடே கிடையாது.  இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: