உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு, மறைமுகத் தேர்தல்: 11 சட்ட திருத்த மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்

சென்னை : இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. 4 நாட்கள் நீடித்த சட்டப்பேரவையில் கூட்டத் தொடரை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைத்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சட்டத்துறை அமைச்சர் சண்முகம், கால்நடைத்துறை அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், தங்கள் துறைச் சார்ந்த, 11 சட்டத் திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தனர். 11 சட்டத் திருத்த மசோதாக்கள், அவையில் அறிமுகம் செய்யப்பட்டு,  குரல் வாக்கெடுப்பு மூலம்  நிறைவேற்றப்பட்டன. இந்த செய்திக் குறிப்பில் ஒவ்வொரு மசோதா குறித்த விவரங்களை பார்க்கலாம்

* சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளும் அவகாசத்தை 365 நாட்களாக உயர்த்த வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

* மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்காக ஏற்கெனவே அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், வழக்கமான சட்டமாக இயற்றுவதற்கான மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

* உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை நீட்டிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தனி அலுவலர் பதவிக்காலத்தை நீட்டிக்க வகை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

* கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டதிருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜூ  சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில், கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்காக தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டைக் கண்காணிக்கவும், பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான வல்லுநர் குழுவில் அரசு பிரதிநிதி ஒருவரை சேர்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

* தமிழ்நாடு வேளாண் விளைபொருளை சந்தைப்படுத்துதல் சட்டத்தின்படி, புதிய சந்தைக்குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சந்தைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் மூலம் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் தொடர்பான சட்டதிருத்த மசோதாவை சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு நேற்று தாக்கல் செய்தார்.

* தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தை கண்காணிக்க மற்றும் ஆய்வு செய்வதற்கான, விசாரணை செய்வதற்கான அதிகாரத்தை அரசிடம் வழங்குவதற்கு வழிவகை செய்வதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

* தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமன உறுப்பினர் முறையை ரத்து செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒப்புதல் பெறப்பட்டது. சட்டப்பேரவையில் 18% இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: