முதுகுளத்தூர் பகுதியில் ரோட்டின் குறுக்கே குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் விபத்து அபாயம்

சாயல்குடி: முதுகுளத்தூர் பகுதியில் ரோட்டின் குறுக்கே குழாய் போட்டு வயற்காடுகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மடைகள், மதகுகளை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் நெல் மகசூல் தரும் தருவாயில் தண்ணீரின்றி வாடுவதால் கண்மாய் தண்ணீரை பாய்ச்சி காப்பாற்றி வருகின்றனர். முதுகுளத்தூர் பகுதியில் மானாவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பெய்த மழைக்கு விவசாயிகள் உழவார பணிகளை துவங்கினர். தாலுகா அளவில் நெல் அதிகமாகவும், அடுத்தபடியாக மிளகாய், மல்லி, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டது.

இந்நிலையில் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை பெய்தது. ஆனால் பெரும்பாலான கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து வர வழியில்லாததால் நீர்நிலைகள் போதியளவு நிரம்பவில்லை. குடிமராமத்து பணி நடந்த கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் மழை பெய்தபோது வயற்காடுகளில் தண்ணீர் கிடந்ததால், பயிர்கள் நன்றாக வளர்ந்தது. இதனால் களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்தனர். தற்போது கதிர்விட்டு, மகசூல் நிலையை எட்டியுள்ளது. ஆனால் போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகிறது. இதனால் இளஞ்செம்பூர், கண்டிலான், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி, சிறுகுடி, நெடுங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்மாயில் கிடக்கும் தண்ணீரை பம்பு செட் மூலம் பாய்ச்சி வருகின்றனர்.

பெரும்பாலும் கண்மாய் சாலையோரங்களில் உள்ளதால் சாலையின் மறுபக்கம் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ரோட்டின் குறுக்கே இரும்பு குழாயை அமைத்தும், சில இடங்களில் மண் மூடைகளை அடுக்கி, குழாய் மூலம் மறுபக்கம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் இளஞ்செம்பூர், நெடுங்குளம், ஒருவானேந்தல் போன்ற பகுதிகளில் வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்துக்குள்ளாகியும் வருவதாக புகார் கூறுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயம் நன்றாக வந்து தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளது. சில இடங்களில் தண்ணீரின்றி கதிர்விட்ட நிலையிலிருக்கும் பயிர்கள் கருகி வருகிறது.

கண்மாய்களில் அமைக்கப்பட்ட மடைகள், மதகுகள் சேதமடைந்து கிடக்கிறது, வாய்க்கால்களும் தூர்ந்து போய் கிடக்கிறது, இதனால் கண்மாய் தண்ணீரை பம்புசெட் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி கருகி பயிரை காப்பாற்றும் நிலை உள்ளது. கோடை காலத்தில் அனைத்து கண்மாய்களிலும் மடைகள், மதகுகளை சீரமைக்க வேண்டும். கூடுதலாக புதியவை கட்டவேண்டும். வாய்க்கால்கள் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: