குமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற சம்பவம்: சந்தேகத்தின் பேரில் 2 பேரின் புகைப்படத்தை கேரள அரசு வெளியீடு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டு கொன்றதாக கூறப்படும் இரண்டு பேரின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவரது புகைப்படத்தை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில் ஒருவர் தளசிக் என்பதும் மற்றொருவர் சசி என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் குமரி மாவட்டம் எல்லை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் பல தொடர்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளிகள் இருவரும் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என எண்ணப்படுவதால் குமரி போலீசார் கேரளாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். போலீசாரின் இத்தகைய முயற்சியை பார்க்கையில், கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு கொலை:

களியக்காவிளை சோதனைசாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளையில் கேரள- தமிழக எல்லையில் செக்போஸ்ட் அமைந்துள்ளது. இந்த செக்போஸ்ட்டில் நேற்று இரவு களியக்காவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது அங்கு 2 மர்ம ஆசாமிகள் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென எஸ்.எஸ்.ஐ வில்சன் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் எஸ்.எஸ்.ஐ வில்சன் மீது குண்டுகள் பாய்ந்தன. சத்தம் கேட்டு அப்பகுதிமக்கள், மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நொடியில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி கிடந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

அவரது கழுத்தில் 3 குண்டுகள் பாய்ந்து இருந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் களியக்காவிளை மற்றும் பாறசாலை போலீசார் விரைந்து சென்று எஸ்எஸ்ஐ வில்சனின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர். 58 வயதான இவர் வரும் மே மாதம் ஓய்வு பெற இருந்தார். அதற்குள் மர்ம ஆசாமிகளின் குண்டுக்கு இரையாகிவிட்டார். அப்பகுதியில் உள்ள மசூதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காரில் இருந்து இறங்கிய 2 பேர் செக்போஸ்ட் அருகே சென்று எஸ்எஸ்ஐயை நோக்கி துப்பாக்கியால் சுட்டது பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களை பிடிக்க கேரள போலீசாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

Related Stories: