ஜேஎன்யூ.வில் தாக்குதல் நடத்தியது யார்? உயர்மட்ட விசாரணையை சந்திக்க நாங்கள் தயார் : ஏபிவிபி அறிவிப்பு

கொல்கத்தா:  ‘டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக  விசாரணைக்கு தயார்,’ என ஏபிவிபி அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிறன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில், பல்கலை. மாணவர் சங்க தலைவர் உட்பட 35 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இடதுசாரி கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் ஜேஎன்யூ மாணவர் அமைப்பு, பாஜ.வின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)  ஆகியவை தாக்குதல் சம்பவத்துக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலான உயர்மட்ட விசாரணைக்கு தயார் என ஏபிவிபி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  ஏபிவிபி.யின் மாநில தலைவர் சப்தர்ஷி சர்க்கார் கூறுகையில், “ ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் என்ன நடந்திருந்தாலும் அது துரதிஷ்டவசமானது. ஆனால், அதனை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளில் தெளிவு இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும், அதற்கு எங்கள் அமைப்பு தயாராக இருக்கிறது,’’ என்றார். டெல்லி தென்மேற்கு மண்டல துணை கமிஷனர் தேவந்தர் ஆர்யா கூறுகையில், ஜேஎன்யூ.வில் நடந்த தாக்குதல் தொடர்பாக பேராசிரியர், 10 மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். பல்கலை. நிர்வாகம் கேட்டு கொண்டதால், பல்கலை. வளாகத்தினுள் சீருடையில்லாத காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்,’’ என்றார்.

டெல்லி போலீசார் மோடியின் கைப்பாவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று அளித்த பேட்டியில், ``டெல்லி மாநில போலீசார் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். அவர்களுடைய நடத்தை, அணுகுமுறை, செயல்பாடு அனைத்தும் பிரதமர் மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுவதை காட்டுகிறது. முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட போலீஸ் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை. எனவே, ஜேஎன்யூ,வில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,’’ என்று கூறினார்.

Related Stories: