பெரம்பூரில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ரயில்வே தனியார்மயம் முடிவை கைவிடவேண்டும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு, தொழிலாளர் விரோத போக்கு மற்றும் ரயில்வே துறையை தனியமார் மயமாக்குவதை கண்டித்து, நேற்று காலை பெரம்பூர் ரயில்வே பணிமனை அருகே எஸ்ஆர்இஎஸ்-என்எப்ஐஆர் தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எஸ்ஆர்இஎஸ்-என்எப்ஐஆர் தொழிற்சங்க பொது செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம், நிர்வாகத் தலைவர் பாலகிருஷ்ணன், குருநாதன், மத்திய கோட்டை கிளை சங்க நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், 100 நாள் திட்டத்தின் மூலம் பல்வேறு ரயில் சேவைகளை தனியாருக்கு தாரைவார்ப்பது, திறனுள்ள ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பது, ஓய்வு வயதை எட்டுவதற்கு முன் விருப்ப ஓய்வில் அனுப்புவது, உற்பத்தி, அச்சகம், கட்டுமான பிரிவு மற்றும் ஆர்பிஎப், ரயில்வே பாதுகாப்பு படைகளை தனியாரிடம் ஒப்படைப்பது என இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், நிருபர்களிடம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ‘இந்திய ரயில்வேயை தனியார்மயம் ஆக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மோடி ஆட்சி செயல்பட்டு வருகிறது. 100 ரூபாய் சம்பாதிக்க, மோடி அரசு 102 ரூபாய் செலவழித்து கொண்டிருக்கிறது.

பயணிகள் கட்டணம் 15 சதவிகிதம், சரக்கு கட்டணம் 18 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. மத்திய ரயில்வே அமைச்சராக லாலுபிரசாத் இருந்தபோது, ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டி காட்டியுள்ளார். ஆனால், தற்போது அதே தண்டவாளத்தில்தான் ரயில்கள் இயங்கியும் அத்துறை நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்கு தொழிலாளர்கள் காரணம் கிடையாது. மத்திய அரசே முழு காரணம். ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக, மோடி அரசு இத்துறையில் நஷ்டத்தை உருவாக்கி வருகிறது. இன்றைக்கு அரசு பேருந்தாக இருந்தாலும், அவற்றைவிட 20 சதவிகித குறைந்த கட்டணத்தில் ரயில்வே செயல்படுகிறது. எனவே, இத்துறையை தனியார்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராடும்போது, அதற்கு ஆதரவாக பாஜவினரும் போராடுகின்றனர். ஏனெனில், அவர்கள் தங்களது சர்வாதிகார போக்கை என்றும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

Related Stories: