பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் கடும் நெரிசல் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்பி விஜயகுமார் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து  கந்துவட்டி, ஆன்லைன் மோசடி உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.

குறிப்பாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நாள்தோறும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் புகார் கொடுத்து வந்தனர். அதன்படி பஸ் நிலையம் முதல் புதுப்பேட்டை ரோடு வரை ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள், கடை அருகே நிறுத்தக்கூடாது என்று ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.மேலும் பஸ் நிலைய பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களிலும், மதிய இடைவெளி நேரங்களிலும் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

சாலையோரம் ஆட்டோக்கள் மற்றும் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது. எஸ்பியின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட போக்குவரத்து போலீசாரும் இதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றது. எனவே எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: