சாத்தூரில் சமூகவிரோதிகளின் புகலிடமான ஆங்கிலேயர் காலத்து பாலம்: இரவு நேரங்களில் மது அருந்தி அட்டகாசம்

சாத்தூர்: சாத்தூரில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதை கட்டுப்படுத்தி பொதுமக்களின் நடைபாதையாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வைப்பாற்றை கடப்பதற்காக கடந்த 1863ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக பதநீர், கடுக்காய், சாதிக்காய், கருப்பட்டி பாகு, சுண்ணாம்பை ஆகியவற்றை கலந்து பலமாக கட்டினர். 1867ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 840 அடி நீளமும் 14 அடி அகலமும் உள்ள இந்த பாலம் வழியாக ஆங்கிலேயர்களின் குதிரை பூட்டபட்ட ஜட்கா வண்டிகள் மட்டும் சென்று வந்தன. சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த பாலம் வழியாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று வந்தன. குதிரை வண்டிகள் மட்டுமே சென்று வந்த 14 அடி அகல பாலத்தில் எதிரெதிரே வாகனங்கள் வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 156 ஆண்டுகளை கடந்தாலும் பாலம் கம்பீரமாகவும் உறுதியாகவும் இருப்பதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். சாத்தூர் நகரின் பிரதான சாலையில் உள்ள இந்த பாலம் வழியாக கோவில்பட்டியைக் கடந்து, கன்னியாகுமரி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

சாத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா காலங்களில் பக்தர்களின் வருகையால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய பாலம் அமைத்து, பழைய பாலத்தை இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, பழைய பாலம் அருகில் இரண்டு வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், அருகில் உள்ள புதிய பாலம் வழியாக பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பழைய பாலத்தில் சமூகவிரோதிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி, அதை சீரமைத்து அமீர்பாளையம், புதுப்பாளையம் பகுதி பொதுமக்களின் நடைபாதையாக பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலரக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: