மத்தியக் கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம்: ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

பாக்தாத்: ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா தாக்குதல்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி, ஈராக் ராணுவ துணை தளபதி  அபு மகதி  உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, ஈராக் நாடாளுமன்றத்தில் அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானம் கடந்த 5-ம் தேதி விவாதத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளில் சக்தி வாய்ந்த நபராகவும், ஈரான் மக்களின் ஹீரோவாகவும் திகழ்ந்த சுலைமானியின் உடல் தலைநகர் டெஹ்ரான், காம், மஸ்ஷாத் மற்றும் ஆவாஷ் உள்ளிட்ட நகரங்கள் வழியாக அவரது சொந்த ஊரான கெர்மனுக்கு  நேற்று கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, இந்திய நேரப்படி மாலையில் மத சடங்குகள் செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுலைமானி இறுதிச் சடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், ஈரான் பழிதீர்க்கும் நடவடிக்கையில் இறங்கும்  என்ற அச்சம் நிலவுகிறது.

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் பேட்டி:

இது தொடர்பாக, ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி ஷாம்கனி அளித்த பேட்டியில், ‘‘பழிவாங்கும் நடவடிக்கை தொடர்பாக 13 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவற்றை முன்னெடுத்தால், அமெரிக்கர்களுக்கு  வரலாற்று கனவாக இருக்கக் கூடும்’’ என எச்சரித்தார். இது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

டிரம்ப் எச்சரிக்கை:

இதற்கிடையே, ஈராக்கில் மிகவும் விலையுயர்ந்த விமான தளத்தை கொண்டுள்ளோம். அதனை கட்டுவதற்கு பல பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. நாங்கள் வெளியேறினால் அதற்கான இழப்பீட்டை அவர்கள் திருப்பி செலுத்த  வேண்டியிருக்கும். வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றினால் முன்னெப்போதும் பார்த்திராத வகையில் மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

ஈரான் தாக்குதல்:

இந்நிலையில், ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள அன்பார் மாகாணத்தில்  அடுத்தடுத்து 2 முறை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அல்-ஆஸாத், இர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மொத்தம் 12 ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவுக்கு  பதிலடி தரப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது .

ராணுவ முகாம்கள் மீதான ஏவுகணைத் தாக்குதலை உறுதி செய்துள்ள அமெரிக்கா, சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதாக கூறியுள்ளது ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தும் என்பதால் மத்தியக் கிழக்கு நாடுகளில் உச்ச  கட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.

டுவிட்டர் டிரெண்ட்:

அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதற்றம் நிலவி வருவதால் டுவிட்டரில் #IranvsUSA என்ற ஹெஷ்டேக் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories: