வாக்கு எண்ணிக்கை சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய தாமதம்: தேர்தல் ஆணையத்தின் செயல் முறைகேட்டுக்கே வழிவகுக்கும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

மதுரை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை தாக்கல் செய்ய தாமதிப்பது முறைகேட்டுக்கே வழிவகுக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான  வழக்கை ஏற்கனவே, தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை, தனது எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஜனவரி 3ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவாளரிடம் தாக்கல் செய்ய   உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல்  செய்துள்ளதாகவும், மேலும் 15 நாள் அவகாசம் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. ஏன் காலதாமதம் எனக்கேட்ட நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இந்த மனு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘முந்தைய உத்தரவுப்படி, ஏன் இன்னும் சிசிடிவி காட்சிப் பதிவுகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை’’ என்றனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், வக்கீல் ராஜாகார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, ‘‘கடந்த 2ம் தேதி துவங்கிய வாக்கு எண்ணிக்கை, 3ம் தேதி மாலை வரை நீடித்தது. இதனால், திட்டமிட்டபடி சிசிடிவி காட்சிகளை தாக்கல்  செய்யமுடியவில்லை. கணினியில் பதிவாகியுள்ள காட்சிகளை பதிவிறக்கம் செய்து ஒப்படைக்க போதிய கால அவகாசம் வேண்டும்” என்றனர்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஆணையத்தின் இதுபோன்ற செயல், முறைகேட்டிற்கு தான்  வழிவகுக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் பதிவான காட்சிகளை இந்த கால இடைவெளியில் எடிட் செய்ய முடியும், சிசிடிவி காட்சிகளை இன்னும் எத்தனை நாட்களில் தாக்கல் செய்வீர்கள்?’’ எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் மனு  மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: