தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு சம்பவம் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை தாமதம் ஏன்? : முதல்வர் எடப்பாடி விளக்கம்

சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஒரத்தநாடு ராமச்சந்திரன் (திமுக) பேசும்போது, “ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் தற்போதைய நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. வன்முறைகளும் நடைபெற்றது. அதை எல்லாம் விசாரிப்பதற்காகத்தான் ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி நியமிக்கப்பட்டு, அவர் தலைமையிலே இன்றைக்கு விசாரணை கமிஷன் நடைபெற்று வருகிறது. விசாரணை ஒரு இடத்தில் நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் காலதாமதம் ஆகின்றது. விசாரணை அறிக்கையை ஆணையம் விரைந்து வழங்கும் என்று நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஸ்டெர்லைட் பிரச்னை குறித்து நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசும் அங்கே நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து, விசாரணை கமிஷனை நியமித்து, விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. எடுத்த உடனே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இது ஒரு மிகப்பெரிய பிரச்னை. நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்றத்தின் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: விசாரணை கமிஷன் அமைக்கும்போது அதற்கான அரசாணையை வெளியிட 3 மாதம், 6 மாதம் ஆகிறது. விசாரணைக்கும் அவர்கள் கால நீட்டிப்பு கேட்கிறார்கள். அதை கொடுக்க அரசு மறுத்தால், விசாரணையை மூடி மறைக்க பார்ப்பதாக நீங்கள் சொல்வீர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை விசாரிக்கும் நீதிபதி, உடல்நலம் சரியில்லை என்று கூறி ஒரு மாதம் அவகாசம் கேட்டிருக்கிறார். எனவே, ஜல்லிக்கட்டு விசாரணை அறிக்கை விரைவில் வெளிவரும். தூத்துக்குடி சம்பவம் விசாரணை இன்னும் முடியவில்லை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Related Stories: