திட்ட செலவில் துண்டு விழும் ஆபத்து அரசை பயமுறுத்தும் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு: நிதி பற்றாக்குறையை சரி செய்யுமா அரசு?

புதுடெல்லி: பல வகையில் வரி வருவாய் ரூ. 2.5 லட்சம் கோடி அரசுக்கு வராததால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையை சரி செய்ய செலவுகளில் கைவைப்பதை தவிர வழியில்லை என்ற நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிதியாண்டின் இறுதி நெருங்கி கொண்டிருக்கிறது. அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி உட்பட பல்வேறு வரி வருவாய் போதுமான அளவுக்கு கூட இல்லை. அரசின் கண்காணிப்பு குறைவு, நடைமுறைகள் சீரான பாதையில் இல்லாததால் பல வகையிலும் வரியை ஏய்ப்பு நடந்துள்ளது.

இதனால் அரசுக்கு இதுவரை 2.5 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிதி ஆண்டின் இறுதிகட்டத்தில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சரி செய்ய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். வேறு வழிகளில் நிதிதிரட்டி சமாளிக்க முடியும். ஆனால், இப்போதுள்ள நிலை மிகவும் மோசமானது. ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார மந்த நிலை என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய வரி வருவாய் அதிகரிக்கவும் வழியில்லை. ஜிஎஸ்டி மாத சராசரி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டவில்லை. எனவே நிதி பற்றாக்குறையை சமாளிக்க செலவுகளில் கைவைப்பதை தவிர அரசுக்கு வேறு வழிகள் இல்லை என நிதியமைச்சக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த நவம்பர் வரை அரசு மொத்த திட்ட மற்றும் திட்டமிடாத செலவுகளில் 65 சதவீதத்தை பூர்த்தி செய்து விட்டது.

அதாவது, ரூ.27.86 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. அதேசமயம், வரி வருவாய், பொருளாதாரம் சரிவால் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் செலவுகளை குறைத்து விட்டது. கடந்த அக்டோபர் - நவம்பரில் மட்டும் திட்டங்களுக்கான செலவுகள் ரூ.1.6 லட்சம் கோடியாக இருந்துள்ளது. செப்டம்பரில் செலவு செய்த தொகை ரூ.3.1 லட்சம் கோடி. அதாவது, இந்த மாதத்தை விட, அடுத்த இரு மாதங்களில் பாதியாக செலவு குறைக்கப்பட்டுள்ளது. இப்படி வரி வருவாய் இழப்பான ரூ.2.5 லட்சம் கோடியை ஈடுகட்டி நிதி பற்றாக்குறையை சரி செய்ய செலவுகளை குறைத்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

* ரூ.1.45 லட்சம் கோடி சலுகை வீண்

பெரிய தனியார் நிறுவனங்களுக்கு  கம்பெனி வரியை பல மடங்கு குறைத்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கம்பெனி வரியை 30ல் இருந்து 22 ஆக குறைத்தார்; முதலீடுகள் பெருகும் என்ற எதிர்பார்ப்பில். ஆனால் அது நடந்ததா என்றால் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு கம்பெனி வரியை குறைத்ததால் அரசுக்கு ₹1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று அப்போது கூறப்பட்டது. அதற்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து பலன் இருந்ததா என்றால் இல்லை என்று இப்போது அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை வைத்தே நிரூபணம் ஆகிறது என்றும் கூறியுள்ளனர்.

* வளர்ச்சி விகிதம் சரிவு

* கடந்த ஆறு காலாண்டாக இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிந்து வந்து இப்போது 4.5 சதவீதமாக குறைந்து விட்டது.

* ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை 1.35 சதவீதம் குறைத்தும் வளர்ச்சி விகிதம் ஏறவில்லை.

* நடப்பு ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி விகிதமாக அரசு குறைத்தும் அந்த அளவை கூட எட்டாதது தான் அதிர்ச்சியான விஷயம்.

* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை விகிதம் 3.3 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது; ஆனால், அது 3.8 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

* ஜிடிபி வளர்ச்சி 5% தான் சாத்தியம்

நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த முன்கூட்டிய மதிப்பீட்டை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 6.8 சதவீதம். இதை விட தற்போதைய மதிப்பீடு மிகவும் குறைவு. நடப்பு நிதியாண்டின் முதல் 2 காலாண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 6.2 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, இந்த ஆண்டில் 2 சதவீதமாக குறைந்தது, விவசாயம், மின் உற்பத்தி துறைகளில் பின்னடைவு போன்றவை சரிவுக்கு முக்கிய காரணம் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: