வேலூர் விஐடியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் அடிப்படை அறிவியலை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்: அமெரிக்க பேராசிரியர் ராபர்ட் எச்.கிரிப்ஸ் பேச்சு

வேலூர்: அடிப்படை அறிவியலை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு பயனுள்ளதாகவும், பயன்பாட்டுக்கும் அதனை பயன்படுத்த வேண்டும் என்று வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் ராபர்ட் எச்.கிரிப்ஸ் பேசினார்.வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விஐடியின் முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி மற்றும் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி(வேதியியல்) இணைந்து நடத்தும் வினையூக்கிகளின் தற்கால வளர்ச்சிகள் குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. கருத்தரங்க தொடக்க விழாவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, ‘ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக தனியார் பல்கலைக்கழகங்கள் அளவில்  விஐடிக்கு முதலிடம் கிடைத்ததற்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் இவற்றில் விஐடி தொடர்ந்து முதலிடம் பெறும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபடும்.இந்தியாவில் உள்ள 993 பல்கலைக்கழகங்களில் ஸ்கோபஸ் இண்டக்ஸ் ஜேர்னல் (Scopus Indexed Journal) என்ற கட்டுரை மற்றும் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடும் இதழின் பட்டியலில் விஐடி முதலிடம் வகிக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும்’ கூறினார்.

விஐடி உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் பேசுகையில், ‘இந்தியாவில் ஆராய்ச்சிக்கான  முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளனர். இந்திய அரசு, நாட்டின் கல்வி முறையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அறிவியல் காங்கிரஸில் பேசிய பிரதமர், மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப மைய பேராசிரியரும்,  2005ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் ராபர்ட் எச்.கிரிப்ஸ் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும்போது, ‘நாம் அடிப்படை அறிவியலை நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும், அத்தகைய அறிவியலை பயனுள்ளதாகவும், முக்கியமான பயன்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த நூற்றாண்டில் வினையூக்கிகள் பிரிவில் பலருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பேசினார்.கருத்தரங்கில் விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், இங்கிலாந்தின் சவுத்தாம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டொமினிக் டில்டெஸ்லி, அமெரிக்க பேராசிரியர் தாமஸ் கொலாகாட், விஐடி இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விஐடி முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி  தலைவர் மேரி சாரல் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார்.

Related Stories: