பேரவையில் கவர்னர் உரை தலைவர்கள் கருத்து

சென்னை: கவர்னர் உரைக்கு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுனர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் அளித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும். ஈழத்தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், அது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்புக்கான அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆளுனர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அரசு தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருக்கிறது. ஜிஎஸ்டி வரி மற்றும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைகளால் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஜவுளித்துறை மீள்வதற்கு எந்த அறிவிப்பும் இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை ஆளுநர் உரை முலாம் பூசி மறைக்க பார்க்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மக்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு எவ்வித நிவாரணமும் கவர்னர் உரையில் தென்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:  கவர்னர் உரை செக்குமாட்டு சுற்றுப் பாதையில் செல்கிறது. வளர்ச்சிக்கான பாதை அமைக்கவில்லை.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): ஆளுநர் ஆற்றிய உரையில் தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. முஸ்தபா (தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் செயலற்ற அரசின் தொகுப்பாகவும், பம்மாத்து மற்றும் பகட்டு வார்த்தைகள் நிறைந்ததாகவும் கவர்னரின் உரை உள்ளது. நொறுங்கி கிடக்கும் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதாக இல்லை. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்ட ரூ.2,335.48 கோடிக்கான திட்டங்கள் என்ன ஆனது என்பது பற்றிய எந்த விவரங்களும் தற்போதைய உரையில் இடம்பெறவில்லை.

Related Stories: