மூதாட்டியை வைத்து நூதன முறையில் கைவரிசை இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி 15 சவரன் பறித்த கும்பலுக்கு வலை

பெரம்பூர்: இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று 15 சவரன் நகைகளை பறித்து தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 5வது பிளாக்கை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி பஷீரா பானு (20). இருவரும் நேற்று முன்தினம் இரவு உறவினர் இல்ல திருமணத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினர். பின்னர், 9.30 மணிக்கு மாமியாருக்கு டிபன் வாங்குவதற்காக பஷீரா பானு, முத்தமிழ் நகர், தெற்கு அவென்யூ பகுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டி சாலையை கடக்க உதவி செய்யும்படி கூறியதால், பஷீரா பானு மூதாட்டியின் கையை பிடித்துக்கொண்டு முத்தமிழ் நகர், தெற்கு அவென்யூ சாலையில் இருந்து தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை கடந்து மறுபக்கத்தில் விட்டுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த ஆட்டோவில் தன்னை ஏற்றிவிடும்படி மூதாட்டி கூறியுள்ளார். அதன்படி, பஷீரா பானு மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றியபோது, அதில் இருந்த 4 பெண்கள், திடீரென பஷீரா பானு வாயை பொத்தி ஆட்டோவில் கடத்தினர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் பஷீரா பானு அணிந்திருந்த கம்மல், செயின், தாலி சரடு, மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் உள்பட 15 பவுன் நகையை பறித்து கொண்டு பஷீராபானுவை தாக்கி, கீழே தள்ளிவிட்டு, ஆட்டோவில் தப்பிவிட்டனர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் தவித்த பஷீரா பானு, பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி தனது கணவனுக்கு நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து அவர் மனைவியை மீட்டார். பின்னர் இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: