வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு: தர்மபுரி அருகே பரபரப்பு

காரிமங்கலம்: தர்மபுரி அருகே பூமாண்டஅள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக கூறி பொதுமக்கள்  தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 30ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஏணி சின்னத்தில் திமுவை சேர்ந்த கந்தையன், கை உருளை சின்னத்தில் அதிமுகவை சேர்ந்த கவிதா நாகராஜ் உள்பட மொத்தம் 4 பேர் போட்டியிட்டனர். தேர்தலின்போது  மொத்தம் 3117 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கடந்த 2ம் தேதி நடந்தது. பூமாண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேக்னாம்பட்டி வாக்குச்சாவடியில் மொத்தம் 388 வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், வாக்குப்பெட்டியில் இருந்த 251 வாக்குச்சீட்டுகளில் ஏணி மற்றும் கைஉருளை சின்னங்களில் முத்திரை பதிவாகியிருந்தது. இதனால், கந்தையன் மற்றும் அவரது ஏஜென்டுகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மேலும், இரண்டு சின்னங்களிலும் வாக்குப்பதிவான சீட்டுகளால் சந்தேகம் உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் மறுத்துவிட்டதால் காரிமங்கலம் வாக்கு எண்ணும் மையத்தின் முன் கந்தையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், பூமாண்ட அள்ளி ஊராட்சி மன்றத் தலைவராக கவிதா நாகராஜன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதனை கண்டித்து கடந்த 3ம் தேதி பூமாண்ட அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை திமுக வேட்பாளர் கந்தையன் மற்றும் அவரது ஆதரவளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர். எனவே, மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். வாக்குப்பெட்டியில் 251 வாக்குச்சீட்டுகளில் இரண்டு சின்னங்களிலும் முத்திரை பதிவாகி இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை பூமாண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேக்னாம்பட்டியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் அதிகாலை முதல் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அங்குள்ள ரேஷன் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பணியாளர் திரும்பி சென்றார். இந்த போராட்டம் தொடர்பாக கந்தையனின் ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டனர். அதில், மேக்னாம்பட்டியில் உள்ள உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி ஒப்படைப்போம். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற 3வது மற்றும் 4வது வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி வீடுகள் தோறும் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இன்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: