மார்கழி திருவிழா 5ம் நாள் சுசீந்திரம் கோயிலில் கருட தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் மார்கழி திருவிழாவில் நேற்று அதிகாலை கருட தரிசன காட்சி நடந்தது. சுசீந்திரம்  தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 1ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ம் நாள் விழாவில்  நள்ளிரவு மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 5ம்  திருவிழாவான நேற்று காலை கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அதிகாலை  கோயில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்தி தரிசனம் நடந்தது. பின்னர்  சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி  நடைபெற்றது.  அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளங்களுடன், தாணுமாலய சுவாமி கோயில்  தெற்கு பகுதியில் உள்ள வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு கிழக்கு  நோக்கி எழுந்தருளினர். இந்த சமயத்தில் விநாயகர், முன்னுதித்த நங்கை அம்மன்,  வேளிமலை குமாரசாமி, மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிகள் ரத வீதியில் வரிசையாக  நின்றிருந்தனர்.

பின்னர் கருடன் தாணுமாலய சுவாமி, அம்பாள்,  பெருமாள் சுவாமிகளை வலம் வரும் கருட தரிசன காட்சி நடைபெற்றது. இக்காட்சியை  உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு  பரவசமடைந்தனர். இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும்  நிகழ்ச்சி நடந்தது. 6ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு சுவாமி  பூங்கோயில் வாகனத்தில் திருவிதியுலா வரும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு  இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7ம் திருவிழாவான நாளை (7ம் தேதி) காலை 5 மணிக்கு சுவாமி பல்லக்கில் திருவீதியுலா  வரும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு நடராஜர் சுவாமிக்கு திருச்சாந்து  சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு உஞ்சல் மண்டபத்தில் வைத்து  சுவாமிக்கு மண்டபப்படி நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு  சுவாமியும், அம்பாளும் கைலாச பர்வத வாகனத்தில் திருவீதியுலா வரும்  நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு பேரம்பலம் சிவசக்தி விநாயகர் கோயில்  முன்பு அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது.

Related Stories: