பொங்கலை வரவேற்க மேலூர் கரும்புகள் தயார்: விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தகவல்

மேலூர்: பொங்கலை வரவேற்கும் விதமாக மேலூர் பகுதியில் இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட கரும்பின் விலை சற்று அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் சூரக்குண்டு, எட்டிமங்கலம், கீழையூர், கீழவளவு, சருகுவலையபட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. இவை தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாததால் கரும்பு உற்பத்தி குறைவாக இருந்தது. இந்தாண்டு போதிய மழையும், கால்வாய் நீரும் இருந்ததால் கரும்பு உற்பத்தி நன்றாக உள்ளது.

இதுகுறித்து வியாபாரி பனையன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை விட கரும்பு அதிகமாக விளைந்திருந்தாலும், உற்பத்தி செலவு அதிகமாகி உள்ளது. இதனால் இந்த ஆண்டு விலை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். 15 கரும்புகளை கொண்டது ஒரு கட்டு. 20 கட்டுகள் கொண்டது ஒரு வண்டி. ஒரு லாரிக்கு 15 வண்டி கரும்புகள் வரை ஏற்றுகிறோம். தற்போது கட்டு ஒன்று ரூ.400 வரை போகிறது. தற்போதைய நிலையில் வண்டிக்கு ரூ.800 வெட்டு கூலியாக உள்ளது. இதுவே பொங்கலை நெருங்கும்போது ஆயிரத்திற்கு மேலாக கூலி உயர்ந்து விடும். ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளை விட மகசூல் கூடுதலாக இருந்தாலும், தற்போது வண்டிக்கு ரூ.6 ஆயிரம் வரை விலை உள்ளது’’ என்றார்.

Related Stories: