ஜிஎஸ்டி இழப்பீடு இல்லாவிட்டால் மாநிலங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.23 லட்சம் கோடி இழப்பு: ஆய்வில் அதிர்ச்சி

புதுடெல்லி: மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது முடிவுக்கு வந்து விட்டால், மாநிலங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், ஜிஎஸ்டி வரி முறையை மத்திய அரசு கொண்டு வந்தபின் பெரிய அளவில் வரி வருவாய் குவியவில்லை. மாநிலங்களுக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி அமல் படுத்தியதில் இருந்து கடந்த மாதத்துடன் சேர்த்து 9 முறைதான் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலானது கடந்த மாதம் ரூ.1,03,184 கோடி வசூல் ஆகியுள்ளது. ஜிஎஸ்டியால் இழப்பு தான் அதிகம் என்று வெளிப்படையாக மத்திய அரசிடம் மாநிலங்கள் முறையிட்டு வந்தன.

இதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க அவசரம் அவசரமாக ரூ.35,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இருப்பினும், இன்னும் ரூ.63,000 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ள 5 ஆண்டு கால அளவு 2022 ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அத்துடன் மத்திய இழப்பீடு வாபஸ் பெறப்படும். இதனால் 2022-23 நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ரூ.1,00,700 கோடி முதல் ரூ.1,23,646 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்ஐபிஎப்பி என்ற அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், வருவாய் இழப்பை ஈடு செய்ய ஏற்கெனவே உள்ள வருவாய் ஆதாரங்கள் மூலம் வருவாயை உயர்த்த வழி செய்ய வேண்டும். அல்லது, செலவினங்களை குறைப்பதை தவிர மாநிலங்களுக்கு வேறு வழியில்லை. பஞ்சாப், ஒடிசா, கோவா, சட்டீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அதிக இழப்பு ஏற்படலாம். இதுபோல், இமாசல பிரதேசம் உத்தரகாண்ட், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வருவாய் குறையும் என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு, அதாவது 2022 ஜூன் 30 வரைதான் மத்திய அரசு இழப்பீடு வழங்கும்.

* இப்போதே வருவாய் இழப்பால் திணறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு தரவில்லை. ரூ.63,000 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது.

* மத்திய அரசு இழப்பீடு வழங்கும் 5 ஆண்டு காலம் முடிந்த பிறகு, மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.23 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* மாநிலங்கள் வருவாய் ஆதாரங்களை அதிகரிக்காவிட்டால், அவற்றுக்கு கடும் நிதி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

* பஞ்சாப், ஒடிசா, கோவா, சட்டீஸ்கர், கர்நாடகா மாநிலங்களுக்கு அதிகபட்ச வருவாய் இழப்பு ஏற்படும்.

* மேலும் 3 ஆண்டு நீட்டிக்கப்படுமா?

ஜிஎஸ்டி வருவாயில் தற்போதே இழப்பு ஏற்பட்டு வருவதால், பல மாநிலங்கள் வருவாய் குறைவால் திணறி வருகின்றன. எனவே, இந்த மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை மத்திய அரசு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என 15வது நிதி கமிஷனிடம் வலியுறுத்தியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories: