தொடரும் சங்கராபுரம் தேர்தல் சர்ச்சை வேட்பாளரின் வெற்றி ரத்து: வீட்டுச்சுவரில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்

காரைக்குடி: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு இரண்டு பேருக்கு வெற்றிக்கான சான்று வழங்கிய விவகாரத்தில் நேற்று திடீர் என அதிகாரிகள் தேவி என்பவரது வீட்டில் தேர்தல் முடிவு அறிவிப்பு ரத்துக்கான  நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு ஜன. 2ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் முதலில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான வெற்றி சான்றை தேர்தல் நடத்தும்  அதிகாரி வழங்கினார். ஆனால், பதிவான வாக்குகளுக்கும் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ள வாக்குகளுக்கும் இடையே 950 வாக்குகளுக்கு மேல் வித்தியாசம் உள்ளது என எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவர் தேர்தல் பார்வையாளர்,  மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கு வெற்றிக்கான சான்று அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவி தரப்பில் ஐகோர்ட்  மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஜன. 10ம் தேதி வரை பிரியதர்சினி பதவி ஏற்க ஐகோர்ட் தடை விதித்தது.இந்நிலையில், தேவி வீட்டில் தாசில்தார் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள், தேர்தல் முடிவு ரத்துக்கான கடிதத்தை நேற்று ஒட்டினர். அந்த கடிதத்தில், ``சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் கிராம ஊராட்சி தேர்தல் வாக்கு  எண்ணிக்கையை உதவி தேர்தல் அலுவலர் பர்வதவர்த்தினி மேற்கொண்டதில் சில நடைமுறை சிக்கலை அடுத்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து தேவி கணவருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர் வாக்கு எண்ணும் அறையில் இருந்து வெளியே சென்றார். பின்னர் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில், தேவியை விட பிரியதர்ஷினி 63 வாக்குகள் கூடுதலாக பெற்றது உறுதி  செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், ஏற்கனவே வழங்கப்பட்ட தேர்தல் முடிவு அறிவிப்பு சான்றினை ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: