பொய் சொல்லும் அரசை மக்கள் புரிந்து கொண்டனர்: தமிழச்சி தங்கபாண்டியன், திமுக எம்பி

அடிமட்ட மக்களின் பிரச்னை என்ன என்பதை தெரியாத அரசாக மத்தியிலும், மாநிலத்திலும் அரசுகள் உள்ளன. நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து உலகத்தில் அத்தனை பொருளாதார வல்லுனர்களும் எச்சரித்து விட்டனர்.  வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குறிப்பாக வெங்காய விலை உயர்வு தாறுமாறாக ஏறி விட்டது.  பிரதமர் மோடி 5 ட்ரீல்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நடைபோடுகிறது என்கிறார். சாப்பாட்டுக்கு ஒரே நாளைக்கு மக்கள் இவ்வளவு கஷ்டப்படும் போது, ஏன் 5 ட்ரீல்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்கிறது என்று ஒரு  பொய்யான தகவலை மோடி தருகிறார் என்பது தெரியவில்லை.

மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்வதைத்தான் இந்த தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. இதை தான் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது. மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் தான்  நமக்கு இந்த முடிவுகள் மூலம் தெரிவிக்கின்றனர். அடிமட்ட மக்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் பிரதிபலிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வேலையில்லா திண்டாட்டம், ரயில் கட்டணம், சிலிண்டர் விலை உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மத்திய, மாநில அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். பணமதிப்பிழப்புக்கு பிறகு  பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.

 இதைபற்றி கவலைப்படாமல் மேலும், மேலும், பொய்யான வாக்குறுதிகளோடு, சுமைகளை சாமானியர்கள் மத்தியில் ஏற்றுவது என்பது சுத்தமாக இந்தியாவை அழிவு பாதைக்கு தான்  அழைத்து செல்லும். இந்த அதிருப்தியில்தான், கடுமையான வெறுப்பில் தான் மக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் இது, மிக, மிக கடுமையான முடிவை ஏற்படுத்தும். அந்த  வகையில் திமுக ஆட்சிக்கு வருவதற்குரிய வேலையை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்தே ஏற்படுத்தி இருக்கிறது.

பொருளாதார மந்தநிலை குறித்து அனைவரும் எச்சரித்து விட்டனர். பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு குறைவாக இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது.  பணமதிப்பிழப்பு முதல் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. தொடர்ந்து, ஜிஎஸ்டி  வரியை கொண்டு வருகின்றனர். அடுத்ததாக, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது. சாமானிய வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி என்கிற  பெயரில் அவர்களது சுமையை அதிகரித்தது. அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி அளித்து ஊக்குவிக்கிறது.

இது, யாருக்கான வளர்ச்சி என்பதை பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்னையால் தான் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜிஎஸ்டியாக இருக்கலாம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. முதலில் மக்கள் மீதான  சுமையை குறைக்க வேண்டிய அரசாங்கத்தின் கடமை. இதை சரி செய்ய வேண்டிய அரசு, ஜிஎஸ்டி வரி குறைப்பதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ரயில் கட்டணம் மூலம் சரி செய்கிறோம் என்று கூறி இன்னொரு தவறை  செய்துள்ளது. மொத்தத்தில் இது தவறானது ஆகும். மத்திய  அரசு ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் பற்றி கவலைப்படவில்லை. பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவது, ஏழைகளை மென்மேலும் ஏழைகள்  ஆக்குவது தான் நோக்கம். தமிழக அரசும் அப்படி தான், மத்திய அரசாங்கமும் அப்படி தான்.

Related Stories: