பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா டிரோன் தாக்குதல் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை

* கிளர்ச்சிப் படை துணை தலைவரும் பலி

* மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம்

பாக்தாத் : ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க படை நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது, மீண்டுமொரு உலகப் போருக்கு வித்திடுமோ என உலக நாடுகள் அச்சமடைந்து உள்ளன. எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளான ஈரான், ஈராக்குடன் சமீபகாலமாக அமெரிக்காவின் உறவு மிக மோசமடைந்து உள்ளது. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ல் விலகிய அமெரிக்கா, தீவிரவாத சக்திகளுக்கு அந்நாடு உதவுவதாக குற்றம்சாட்டி வருகிறது. மேலும். ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. எந்த நாடும் ஈரானிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என தடையும் விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அண்டை நாடான ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டு படையினர் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் ஈராக்கில் அமெரிக்க படையினர் தங்கி உள்ள ராணுவ தளம் மீது ராக்கெட் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்,  அமெரிக்க கான்ட்ராக்டர் ஒருவர் கொல்லப்பட்டார். பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.  இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  

இதற்கு ஈரான், ஈராக் அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதோடு, இந்த  தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட பேரணியின்போது, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது. இரு நாட்டு ராணுவ உடை அணிந்தவர்கள் தூதரகத்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர். அமெரிக்க தூதரகம் முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இது அமெரிக்காவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இதற்கான பதிலடி மிக பயங்கரமாக இருக்குமென அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்துக்கு  நேற்று முன்தினம் இரவு ஈரானின் சக்தி வாய்ந்த புரட்சிகர பாதுகாப்பு படையின் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி வருவதை அறிந்த அமெரிக்க படை, அதிபயங்கர ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியது. இதில், சுலைமானியும், ஈரானின் ஆதரவு படையான ஹசத்தின் துணைத் தளபதி அபு மகதி அல் முகந்திஸ் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். விமான நிலையத்தில் அவர்கள் சென்ற 2 கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் டிரோன்கள் விழுந்து வெடித்ததாக கூறப்படுகிறது.  

கொல்லப்பட்ட சுலைமானி, லெபனான் அல்லது சிரியாவில் இருந்து விமானம் மூலம் பாக்தாத் வந்ததாக கூறப்படுகிறது. அவரை ஈராக் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு வந்திருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.  இத்தகவலை புரட்சிகர பாதுகாப்பு படையும், ஈராக் அரசு உயர் அதிகாரிகளும் உறுதி செய்தனர். மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனும் உறுதி செய்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஈரானும், ஈராக்கும் கடும் கோபம்  அடைந்துள்ளன. கொல்லப்பட்ட காஸ்சிம் சுலைமானி, மத்திய கிழக்கின் மிகுந்த சக்திவாய்ந்த தலைவராக இருந்தவர். அப்படிப்பட்ட அதிகாரமிக்க நபரை அமெரிக்க படை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானும், ஈராக்கும் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால் உலக நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன. எனவே, இந்த விவகாரம் அடுத்த உலகப் போருக்கு வித்திடும் மோசமான சம்பவமாகக் கூட அமையலாம் என கருதப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

சக்தி வாய்ந்த சுலைமானி

ஈரானின் மிகவும் பலம் வாய்ந்த நபராக கருதப்படுபவர் சுலைமானி (62). லெபனான், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு படைகள், இவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டவை. சிரியாவில் உள்நாட்டு போர் வெடிப்பதற்கு முக்கிய காரணகர்த்தா இவர்தான். ஈரான் தலைவர் அலி கமேனெய்யுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். அந்நாட்டின் ஹீரோவாக போற்றப்படுபவர். கடந்த 1998ல் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் உயரடுக்கான குத்ஸ் படைப்பிரிவு தளபதியாக இவர் பொறுப்பேற்றார். 1980ம் ஆண்டுகளில் இருந்தே மத்திய கிழக்கு போர்க்களங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். லெபனான், சிரியாவில் இவரது தலைமையில் ஈரான் ஆதரவு படைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரான்-அமெரிக்கா இடையேயான உறவு மோசமடைந்ததற்கு காரணமே இவர்தான் என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இதனால், குத்ஸ் படையை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.

மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை கொன்ற ரத்தக்கறை படிந்த கரங்களை கொண்டவர் என சுலைமானியை அமெரிக்கா குறிவைத்து வந்தது. சுலைமானி நினைத்தால் ஈரானிலும், ஈராக்கிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஈராக்கில் புதிய ஆட்சி அமைவதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் சுலைமானி நேரடியாக ஈடுபட்டவர். இவர் ஏற்கனவே கொல்லப்பட்டதாக பலமுறை வதந்திகள் வந்துள்ளன. 2006ல் ஈரானில் நடந்த விமான விமானத்திலும், 2012ல் டமாஸ்கசில் நடந்த குண்டு வெடிப்பிலும் சுலைமானி கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. சமீபத்தில் கடந்த 2015ல் சிரியாவின் உள்நாட்டு போரில் சுலைமானி படுகாயமடைந்து இறந்ததாக தகவல் பரவின. ஆனால், இம்முறைதான் அவர் பலியானது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. சுலைமானி அணிந்திருந்த மோதிரத்தை கொண்டு அவரது சடலம் அடையாளம் காணப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் கூறி உள்ளனர். சுலைமானி இறந்ததைத் தொடர்ந்து குத்ஸ் படைப்பிரிவின் புதிய தளபதியாக இஸ்மாயில் கானியை ஈரான் நியமித்துள்ளது.

அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். முடிந்தால் விமானம் மூலமாக சொந்த நாடு செல்லுங்கள், முடியாவிட்டால் சாலை மார்க்கமாக பிறநாடுகளுக்கு செல்லுங்கள்,’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக, தங்களுக்கு முன்கூட்டி எந்த தகவலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதம் அதிகரித்தது. மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் நிலவுகிறது. மேலும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் நேற்று அதிரடியாக அதிகரித்தது.

டிரம்ப் உத்தரவுபடி தாக்குதல்

பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், ‘வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கர்களை பாதுகாக்கும் நோக்கத்தில், அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில், சுலைமானியை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது. மேலும் எதிர்காலத்தில் ஈரான் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா கவலை

சுலைமானி கொல்லப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பொறுமையை கடைபிடிக்க வேண்டுமென எப்போதும் வலியுறுத்தும் இந்தியா, இந்த சமயத்திலும் அதையே வலியுறுத்துகிறது. தற்போதைய நிலைமை மேலும் மோசமடையக் கூடாது. அதிகரித்து வரும் பதற்றத்தின் மூலம் உலகுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு நிலவுவது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாகும்,’ என கூறப்பட்டுள்ளது.

அமைதியை கடைபிடியுங்கள்

சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் கெங் சுயாங் அளித்த பேட்டியில், ‘‘இருதரப்பும் அமைதியை கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக, அமெரிக்கா அமைதியுடன் இருந்து, மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

முரட்டு துணிச்சல்

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘சுலைமானியை கொன்றது முரட்டுத் துணிச்சலான காரியம். இதனால், அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. சுலைமானி தனது நாட்டின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர். அவரது மறைவுக்காக ஈரான் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்,’ என கூறப்பட்டுள்ளது.

உலகம் அபாயத்தில் உள்ளது

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அளித்த பேட்டியில், ‘‘மிகுந்த அபாயகரமான உலகத்தில் நாம் உள்ளோம். உலகின் அனைத்து பகுதியிலும் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். பிரான்ஸ் எந்த நாட்டுக்கு சார்பாக இருக்காது. அனைவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்,’’ என்றார்.

பழிவாங்குவோம்...

ஈரான் தலைவர் அலி கமேனெய் டிவிட்டர் பதிவில், ‘பல ஆண்டாக செய்த தனது இடைவிடாத சேவைகளுக்கு பரிசாக சுலைமானி வீரமரணம் பெற்றுள்ளார். இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் காத்திருக்கிறது,’ என்று எச்சரித்துள்ளார். இதேபோல், ஹசத் அல் ஷாபி ராணுவ படையின் கமாண்டர் அல் கசாலி கூறுகையில், ‘‘இனி வரவிருக்கும் போட்டியில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது,’’ என்றார்.

Related Stories: