70 வயதிலும் ஹீரோவாக நடிப்பது எப்படி? : ஐதராபாத்தில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கான நிகழ்ச்சி நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்தது. அப்போது ரஜினிகாந்த் பேசியதாவது: 70 வயதிலும் ஹீரோவாக நடிக்கிறீர்களே, எப்படி எனர்ஜியுடன் இருக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். இவ்வளவு எனர்ஜியுடன் இருக்க சில ஆலோசனைகள் சொல்கிறேன். ஆசையை குறைத்துக்கொள்ளுங்கள், கவலையை குறைத்துக்கொள்ளுங்கள், உணவை குறைத்துக்கொள்ளுங்கள், தூக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள், குறைவாகப் பேசுங்கள். இதை கடைப்பிடித்தால் எனர்ஜி கிடைக்கும்.

தெலுங்கு ரசிகர்கள் சினிமா பிரியர்கள். தமிழ் ரசிகர்களை போலவே தெலுங்கு ரசிகர்களும் கிடைத்திருப்பது என் பூர்வஜென்ம புண்ணியம். 1976ல் தெலுங்கில் நான் நடித்த முதல் படம் ‘அந்துலேனி கதா’. பிறகு ‘பெத்தராயுடு’ போன்ற படங்களில் நடித்தேன். இதெல்லாம் ரஜினி நடித்ததால் ஹிட்டாகவில்லை. அதுபோன்ற நல்ல படங்களில் ரஜினி இருந்தார். அதனால் ஹிட்டானது. முருகதாஸ் டைரக்‌ஷனில் நடிக்க 15 ஆண்டுகளாக நடந்த முயற்சி இப்போது நிறைவேறியுள்ளது. ரசிகர்கள் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: