ஏற்காடு வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக எம்.எல்.ஏ நுழைந்து மிரட்டல்

* விதியை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தகவல்

சேலம்: ஏற்காடு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிமுக எம்.எல்.ஏ. உள்ளே நுழைந்து மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரித்தார். சேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. 7-வது வார்டுக்கு தி.மு.க. வேட்பாளராக புஷ்பராணியும், அதிமுக வேட்பாளராக ராஜலட்சுமியும் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை ஏற்காடு அரசு பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், காலை 7 மணியில் இருந்தே 2 பேரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். நேற்று அதிகாலை வரையில் புஷ்பராணி முன்னிலையில் இருந்துள்ளார். இதனால், திமுக வெற்றி அறிவிப்பு வரும் என கட்சியினர் காத்திருந்தனர்.  இச்சூழலில், காலை 7.15 மணிக்கு ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சித்ரா திடீரென வந்து வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்தார். பின்னர், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு சில அதிகாரிகள் ஏன் உள்ளே வந்தீர்கள் என்று கேள்வி கேட்டதும், மிரட்டல் விடுத்தார்.

இதோடு மட்டுமில்லாமல் அவரது ஆதரவாளர்கள் 10 பேரும் சேர்ந்து மிரட்டினர். உடனே அதிகாரிகள், ‘‘மக்கள் பிரதிநிதியான நீங்கள் வாக்கு எண்ணும் அறைக்குள் வரக்கூடாது. இது தேர்தல் விதிமீறலாகும்’’ என்று பதில் அளித்தனர். இதன்பின், எம்.எல்.ஏ. சித்ரா தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். பின்னர், அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி தரப்பில், ஏற்காடு டவுன், தலைச்சோலை பஞ்சாயத்தில் உள்ள குறிப்பிட்ட 2 வார்டின் வாக்குகளையும், செல்லாத வாக்குகள் என பிரித்து தனியாக எடுத்து வைக்கப்பட்ட 1,784 வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த மனு கொடுக்கப்பட்டது. இதை ஏற்ற தேர்தல் அதிகாரிகள், காலை 10 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தினர்.  அதன்பின், மாலை வரையும் முடிவு அறிவிக்கப்படவில்லை. நீண்ட இழுபறிக்கு பின் இரவு 8.15 மணியளவில் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராணி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

Related Stories: