அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனம் கோலம் போட்ட காயத்திரி மீது பொய் வழக்கு போட முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காயத்திரி என்ற ஆராய்ச்சியாளர்  அப்பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். தற்போது ஆராய்ச்சியாளர் காயத்ரி மீது பொய் வழக்கு போடுவதற்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆராய்ச்சியாளர் காயத்திரி ஒரு அமைப்பின் மூலமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, மாலத்தீவு ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாத்தை நிராகரிக்கும் மக்கள் மீது அந்தந்த அரசுகள் காட்டும் பாரபட்சம் பற்றியே அவரது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் உள்ள 80 பக்கங்களில் எந்த பக்கம் பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்பதை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

தமிழக ஆட்சியாளர்களை மகிழ்விக்க வேண்டுமென்ற நோக்கத்தில், இத்தகைய ஜனநாயக, சட்டவிரோத செயலுக்கு காவல்துறை ஆணையர் துணை போகக் கூடாது. அமைச்சர் பாண்டியராஜன், ‘கோலம் போடுறவங்கள பார்த்தா, குடும்பத் தலைவி மாதிரி தெரியல” என்று கூறியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.  இத்தகைய அரசியல் நாகரீகமற்ற கருத்துக்களை, குறிப்பாக, பெண் இனத்திற்கு எதிராக கூறியிருக்கிற அமைச்சர் பாண்டியராஜன் தமது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, ஆராய்ச்சியாளர் காயத்திரி மீதான இத்தகைய விசாரணைகளை உடனடியாகத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆணையரை கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: