உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை வரை தொடரும்: மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

சென்னை: வாக்கு எண்ணும் பணி நாளை வரை தொடரும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரவில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படமாட்டாது; வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் வரை பணிகள் தொடரும். மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் 16,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் 30,300 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் எந்தவித முறைகேடும் இல்லை, முறையாக நடைபெற்று வருகிறது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் ஊழியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவது பற்றி தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சிகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 151 இடங்களிலும், அதிமுக கூட்டணி 128 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 1 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 835 இடங்களிலும், அதிமுக கூட்டணி 669 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

மாநில தேர்தல் ஆணையருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து தனது புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக அணியின் வெற்றியை தடுக்க ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் சதி செய்துள்ளனர் என குற்றம்சாட்டினார். ஆளுங்கட்சினர், அதிகாரிகளின் தவறுகளை மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: