அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் ஓட்டு வழங்காததால் அரசு ஊழியர்கள் மறியல்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்கு பெட்டிகள் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு பதிவின்போது, அரசு ஊழியர்கள் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்தனர். அவர்கள் கடந்த 31ம் தேதி தபால் ஓட்டு செலுத்தி வந்தனர். நேற்றும் தபால் ஓட்டு செலுத்த வந்தனர்.  அப்போது வாக்கு செலுத்துவதற்கான படிவம் இல்லை என்று அதிகாரிகள் கூறியதால் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் ஆண்டிமடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தி, தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் கலைந்து சென்றனர். பிடிஓவை முற்றுகையிட்டு வாக்குவாதம்: தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்களுடன் 3 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படாததால் தங்கள் ஓட்டை பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக ஆசிரியர்கள், பிடிஓ அருண்மொழித்தேவனை முற்றுகையிட்டு சரமாரி கேள்விகள் கேட்டனர். பின்னர் பிடிஓவிடம் வாக்குவாதம் செய்தனர்.இதையடுத்து வேட்பாளர்களிடம் பிடிஓ அருண்மொழித்தேவன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய தேதிக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் அவரவர் வீட்டுக்கு தபால் ஓட்டுக்களுக்கான படிவம் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என கூறிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி சென்றுவிட்டார்.

இதுகுறித்து வேட்பாளர்கள் கூறுகையில், நேற்று வரை தபால் ஓட்டுக்கான விண்ணப்பத்தை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டு வந்தோம். ஆனால் அதிகாரிகள் தபால் ஓட்டு படிவம் அனுப்பிய பட்டியலில் எங்களது உறவினர்கள் பெயர்கள் இல்லை என கூறுகின்றனர். இதனால், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு படிவம் அனுப்பாததால், அரசு ஊழியர்களால் தபால் ஓட்டு போடமுடியவில்லை என கூறினர்.

Related Stories: