ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் ரயில்கள், ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம் புத்தாண்டு முதல் கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 40 பைசா உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கட்டண உயர்வு மிகவும் குறைவாக  இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணத் ரயில்களில் குளிரூட்டி வசதி இல்லாத வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு காசு, விரைவு வண்டிகளில் இதே வகுப்புகளுக்கு 2காசு வீதம் உயர்த்தப்பட்டுள்ளன. விரைவு ரயில்களில் குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், புறநகர் ரயில்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.  சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் ரயில்களில் அதிகபட்ச கட்டண உயர்வு ₹10 தான் என்பதாலும் அதிக பாதிப்புகள் இல்லாத இக்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதேநேரத்தில் ரயில் டிக்கெட் கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்ற வினா எழுகிறது. அதனால் பயணிகளுக்கு போதுமான இருக்கைகள், கழிவறைகள் உள்பட இதர வசதிகள் செய்து தர வேண்டும். இவைதவிர, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் ரயில் டிக்கெட் கட்டணத்தை விமானக்கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது நியாயமற்றது. அந்த முறையை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.

Related Stories: