தபால் வாக்குக்கு அனுமதி மறுப்பு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

சென்னை: தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்காத அதிகாரிகளை கண்டித்து பெரியபாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பூண்டி, எல்லாபுரம் ஒன்றியத்தில், 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக முன்கூட்டியே சென்றனர். அப்போது, தேர்தல் முடித்துவிட்டு வந்த பிறகு தபால் ஓட்டு போடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 2 கட்ட தேர்தல் முடிந்த பிறகு நேற்று அங்கன்வாடி பணியாளர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள், நீங்கள் வாக்களிக்க முடியாது. நீங்கள் கொண்டு வந்த ஆவணங்களில் உங்களுக்கு பணி ஆணை வழங்கிய சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் கையொப்பம் மற்றும் சீல்  இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதையறிந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெரியபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அலுவலகத்தில் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, அவர்கள் கூறுகையில், ‘கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பணியாற்றினோம்.

நாங்கள் அளிக்க வேண்டிய தபால் ஓட்டுகள் போட ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தால் அங்குள்ள அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் கையொப்பம் மற்றும் சீல்  இல்லாததால் நீங்கள் வாக்களிக்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்களை வாக்களிக்க விடாமல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக பணியாற்றுகிறார்கள். எங்களுக்கு தேர்தல் வேலை வழங்கி விட்டு வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். எங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்காவிட்டால் இனிவரும் காலங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடமாட்டோம்’ என கூறினர். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்கள் தபால் ஓட்டு போட அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த 700 ஊழியர்கள் பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: