வழக்கில் இருந்து விடுவிக்க கொள்ளையன் முருகனிடம் லஞ்சம் சென்னை இன்ஸ்பெக்டருக்கு சம்மன்: மத்திய மண்டல ஐஜி தகவல்

திருச்சி: கொள்ளை வழக்கில் இருந்து விடுவிக்க கொள்ளையன் முருகனிடம் லஞ்சம் பெற்ற சென்னை இன்ஸ்பெக்டருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என மத்திய மண்டல ஐஜி கூறினார். திருச்சியில் பிரபல நகைக்கடையில் நடந்த நகை கொள்ளை தொடர்பாக கடந்த அக்டோபர் 2ம் தேதி 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த கும்பல் தலைவன் முருகனின் சகோதரி கனகவல்லி, கூட்டாளி மதுரையை சேர்ந்த கணேசன், திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளி முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும், கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். பெங்ளூரில் இருந்து முருகனை அழைத்து வந்து பெரம்பலூர் அருகே ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். இதே போல் கணேசனிடமிருந்து 6 கிலோ, மணிகண்டனிடமிருந்து 4 கிலோ 800 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் எஸ்பியாக இருந்த ஒருவருக்கு 15 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த காரை வாங்கி கொடுத்ததாக கூறினார். அதுபோல் 2015ல் சென்னையில் நகை கடை அதிபர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கு ஒன்றில் தப்ப வைப்பதற்காக சென்னையை சேர்ந்த இன்ஸ்பெக்டருக்கு 18 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் கூறுகையில், வங்கி கொள்ளையன் முருகன் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பணம் கொடுத்ததாக வந்த தகவலை அடுத்து அவரிடம் விசாரிக்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: