சத்திய மூர்த்திபவனில் கோலம் போட்டு மகிளா காங். எதிர்ப்பு: போலீசாருடன் தள்ளுமுள்ளு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மகிளா காங்கிரசை சேர்ந்த பெண்கள் சத்தியமூர்த்தி பவனில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது. நேற்று சத்தியமூர்த்தி பவனில் கூடிய மகிளா காங்கிரசார், அதன் நுழைவு வாயில் முன்பு ‘சிஏஏ, என்ஆர்சி வேண்டாம்’ என்று கோலம் போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டம் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் சுமதி அன்பரசு, வக்கீல் சுதா, மைதிலிதேவி, மலர்கொடி, மானசா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை சாலைக்கு செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் பெண் போலீசார், மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த காங்கிரசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories: